இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித்தலைவர் ஜோ ரூட்டின் அபார சதத்தின் மூலம் இங்கிலாந்து அணி சவாலான நிலைக்கு உயர்ந்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களைப் பெற்று 42 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.
காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 381 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடும் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்களுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
ஆணித்தலைவர் ஜோ ரூட் 67 ஓட்டங்களுடனும், ஜொனி பெயார்ஸ்டோ 24 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். ஜொனி பெயார்ஸ்டோ மேலும் 4 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து டேன் லோரன்ஸ் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும், டொம் பேஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் சதமடித்தார். 309 பந்துகளை எதிர்கொண்ட அவர் 18 பௌண்டரிகளுடன் 186 ஓட்டங்களைக் குவித்து துரதிர்ஸ்டவசமாக ரன்அவுட் ஆனார்.
இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜெக் லீ ஓட்டமின்றி ஆட்டமிழக்காதுள்ளார்.
இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே டெஸ்ட் தொடரை இழப்பதனை தவிர்க்க முடியும், தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
அபாரமாகப் பந்துவீசிய லசித் எம்புல்தெனிய 41 ஓவர்களில் 6 ஓட்டமற்ற ஓவர்களுடன் 132 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.