பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான அண்டி மர்ரி அவுஸ்திரேலிய ஓபனில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் மெல்பர்ன் பயணமாகவிருந்த அண்டி மர்ரிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருக்கின்றமை உறுதியானது.
அதனையடுத்து தனிமைப்படுத்தலுக்கு சென்ற அண்டி மர்ரி, குணமானதும் அவுஸ்திரேலிய ஓபன பயணிக்க எண்ணியிருந்தார்.
ஆனால், அவுஸ்திரேலியாவுக்கு பயணமான பின்னர் அங்கும் 14 – நாட்கள் சுய தனிமைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால் அடுத்த மாதம் 8 ஆம் திகதி தொடங்கவுள்ள தொடரில் பங்கெடுப்பது சாத்தியம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
அண்டி மர்ரி கடந்த வருடம் உபாதை காரணமாக அவுஸ்திரேலிய ஓபன் வாய்ப்பை இழந்தார். இறுதியாக அவர் 2019 ஆம் ஆண்டிலேயே அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஓராண்டில் நடத்தப்படும் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முதல் அம்சமாக அவுஸ்திரேலிய ஓபன் நடைபெறுவது வழமையாகும்.
ஆனால், ஜனவரியில் ஆரம்பமாக வேண்டிய இந்தத் தொடர் கொரோனா நெருக்கடியால் பெப்ரவரில் நடைபெறுகின்றது.
இதற்கான வீர, வீராங்கனைகள் இந்நாட்களில் அவுஸ்திரேலியாவில் முகாமிட்டு கடுமையான சுகாதார ஏற்பாடுகளுக்கு மத்தியில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்.