January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெங்களுர் – ஹைதராபாத் மோதல்: இன்று பலப்பரீட்சை!

Photo: BCCI/ IPL

13 ஆவது இந்தியன் பிரிமியர் லீக்கில் – துடுப்பாட்ட சிகரமான விராத் கோலி தலைமையிலான பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

ஜாம்பவான்கள் பலர் கடந்த காலங்களில் அணியில் இடம்பெற்றும் இதுவரை சாம்பியன் ஆகாத அணி என்ற குறை பெங்களுர் அணிக்கு உள்ளது. அந்தக் குறையை தீர்க்கும் எதிர்பார்ப்புடன் இன்றைய ஆட்டத்தை பெங்களுர் அணி ஆரம்பிக்கவுள்ளது.

பெங்களுர் அணியின் துடுப்பாட்ட பலமாக இந்திய அணித்தலைவர் விராத் கோலி காணப்படுகிறார். “360 பாகை துடுப்பாட்ட வீரர்” என வர்ணிக்கப்படும் தென் ஆபிரிக்காவின் ஏ.பி டிவிலியர்ஸ், அவுஸ்திரேலியாவின் ஏரோன் பிஞ்ச், இந்தியாவின் பார்திவ் பட்டேல் ஆகியோர் பெங்களுர் அணியின் நம்பிக்கைக்குறிய துடுப்பாட்ட வீரர்களாகத் திகழ்கின்றனர்.

இவர்களில் விராத் கோலி அல்லது ஏ.பி டிவிலியர்ஸ் ஆகிய இருவரில் ஒருவர் களத்தில் நின்றாலும் எதிரணியின் பாடு திண்டாட்டமாகிவிடும் என்பது உறுதி.

எனவே, இந்த இருவரையும் ஆட்டமிழக்கச் செய்வதில் எதிரணி வீரர்கள் கடும் சிரத்தை எடுப்பார்கள் எனலாம்.இந்தியாவின் யுவேந்திர ச்சால், வோஸிங்கடன் சுந்தர், அவுஸ்திரேலியாவின் அடம் ஸம்பா, இங்கிலாந்தின் மொயின் அலி ஆகியோர் பெங்களுர் அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துகின்றனர்.

இவர்களில் வொஸிங்டன் சுந்தர், மொயின் அலி ஆகியோர் துடுப்பாட்டத்திலும் கைகொடுக்கக்கூடியவர்கள். இதனால் பலம் பொருந்திய அணியாகவே பெங்களுர் அணி காணப்படுகின்றது.

Photo: BCCI/ Royal Challengers Bangalore

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துடுப்பாட்டத் துரும்புச் சீட்டாக அணித்தலைவர் டேவிட் வார்னர் மிளிர்கிறார். இவர் கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த துடுப்பாட்ட வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வென்றவர். அதே துடுப்பாட்ட வித்தையை இந்தமுறையும் டேவிட் வார்னர் வெளிப்படுத்துவார் என நம்பப்படுகின்றது.

அவரே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கிறார். இங்கிலாந்தின் ஜொனி பெயார்ஸ்டோவ், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன், இந்தியாவின் மனிஸ் பாண்ட்டே, அவுஸ்திரேலியாவின் மிச்செல் மார்ஸ் ஆகியோரும் சன்ரைசர்ஸ் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கின்றனர்.

இந்த வீரர்கள் களத்தில் நின்றால் ஓட்டங்கள் தானாக குவியும் என்பது கடந்த கால வரலாறு. கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் அதிரடி சிக்ஸர்களை அலாதியாக விளாசுவதில் இவர்கள் வல்லவர்கள்.எந்த சூழ்நிலையிலும் புத்திசாலித்தனமாக பந்துவீசக்கூடிய இந்தியாவின் புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் பந்துவீச்சில் பிரகாசிக்க காத்திருக்கின்றனர்.

இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உந்துசக்தி அளிக்கும் வீரராக சுழல்பந்து நட்சத்திரமான ஆப்கானிஸ்தானின் ரஸிட் கான் சன்ரைசஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த பருவகாலத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்.

ஆப்கானிஸ்தானின் முகமது நபி, ஸபாஸ் நதீம் ஆகியோரும் துடுப்பாட்ட வீரர்களை சிரமத்தில் ஆழ்த்தும் பந்துவீச்சாளர்களாக சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் பெங்களுர் மற்றும் ஹைதராபாத் அணிகள் இதுவரை 14 போட்டிகளில் மோதியுள்ளன.அவற்றில் ஹைதராபாத் அணி 7 போட்டிகளிலும், பெங்களுர் அணி 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. சுமநிலையில் முடிந்த ஒரு போட்டியில் சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றதும் நினைவுகூரத்தக்கது.