மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
பங்களாதேஷுக்கு விஜயம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியை டாக்காவில் எதிர்கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களையே பெற முடிந்தது.
பின்வரிசை வீரரான ரொவ்மன் பவெல் அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றார். கிம் ஒட்லே 24 ஓட்டங்களையும், கும்ரா பொன்னர் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மெஹ்டி ஹசான் மிராஸ் 4 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன், முஷ்டபிகுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலகுவான இலக்கான 149 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. அணித்தலைவர் தமிம் இக்பால் 50 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 2-0 என பங்களாதேஷ் அணி முன்னிலை பெற்றுள்ளது.