
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெற்ற சிறப்பான சதத்தின் மூலம் இலங்கை அணி சவால் விடுக்கும் எதிர்பார்ப்புக்கு உயர்ந்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி 7 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. குசல் ஜனித் பெரேரா 6 ஓட்டங்களுடனும், ஓஸத பெர்னாண்டோ ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.
என்றாலும் அடுத்து இணைந்த லஹிரு திரிமான்ன – ஏஞ்சலோ மெத்யூஸ் ஜோடி மூன்றாம் விக்கெட்டுக்காக 69 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆறுதல் அளித்தது. லஹிரு திரிமான்ன 43 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து இணைந்த ஏஞ்சலோ மெத்யூஸு ம் டினேஸ் சந்திமாலும் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை உயர்த்தினர். டினேஸ் சந்திமால் 121 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பௌண்டரிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
மிகுந்த பொறுமையுடன் துடுப்பெடுத்தாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தை எட்டினார். 228 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பௌண்டரிகளுடன் 107 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
நிரோஸன் திக்வெல்ல 60 பந்துகளில் ஒரு பௌண்டரியுடன் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை முதல் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.