அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டு நாடு திரும்பிய ரஹானே தலைமையிலான இந்திய அணிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவ்வாறே ரஹானேவின் சொந்த ஊரிலும் ரசிகர்கள் திரண்டு செங்கம்பள வரவேற்பை அவருக்கு கொடுத்தனர்.
வெற்றியை கொண்டாடும் பொருட்டு மாபெரும் கேக் வெட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த கேக்கை அவர் வெட்டாமல் பின்வாங்கிவிட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மாபெரும் கேக்கில் கங்காருவின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்ததே அதற்குக் காரணமாகும்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேசிய சின்னமான கங்காரு உள்ளது. அவுஸ்திரேலியாவை வீழ்த்தியதை எடுத்துக்காட்டும் வகையில் கேக்கில் கங்காருவின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அவ்வாறு செயற்படுவது அநாகரிகமானது எனத் தெரிவித்து அந்த கேக்கை வெட்டுவதற்கு ரஹானே மறுப்பு தெரிவித்துள்ளார். இது அவரது நற்பண்புக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு என இந்திய ஊடகங்கள் ரஹானேவை பாராட்டியுள்ளன.