July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோல்வியை தவிர்க்குமா இலங்கை?

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை இழப்பதனை தவிர்க்க முடியும்.

போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தாலோ அல்லது இங்கிலாந்து வெற்றிபெற்றாலோ டெஸ்ட் தொடர் இங்கிலாந்து வசமாகிவிடும்.

எனவே, வெற்றியை மாத்திரமே இலக்காகக்கொண்டு விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க விஜயத்தின் போது உபாதைக்குள்ளான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இந்தப் போட்டியிலும் இடம்பெறாததால் டினேஸ் சந்திமால் இலங்கை அணியை வழிநடத்துகின்றார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மோசமாக செயற்பட்டாலும் இரண்டாம் இன்னிங்ஸில் அனைத்து வீரர்களும் திறமையாக விளையாடினர்.

எனவே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முற்றுமுழுதாக சிறப்பாக விளையாடி யாரும் எதிர்பாராதவொரு முடிவை பெறுவதற்கே ஓரணியாக இணைந்து எதிர்பார்ப்பதாக டினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று எல்லோரும் எதிர்பார்ப்பதைவிட மாறான முடிவு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிடைக்கும் எனவும், மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்பில் இலங்கை அணி தயாராகியுள்ளது என்றும் இலங்கை அணியின் சிரேஸ்ட வீரரான ஏஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை முதல் போட்டி நடைபெற்ற மைதானத்திலேயே நடைபெறுவதால் இரண்டு அணிகளுக்கும் அது சரிசமனான வாய்ப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், முதல் போட்டி முடிந்து அடுத்த சில நாட்களில் இரண்டாவது போட்டி நடைபெறுவதால் ஆடுகளம் எதற்கு சாதகமாக இருக்கும் என கணிப்பிட முடியாமல் உள்ளது.

காலி சர்வதேச மைதானம் வழமையாக முதல் மூன்று நாட்களும் துடுப்பாட்டத்துக்கு ஏதுவாக இருந்தாலும் கடைசி இரண்டு நாட்களும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் வாய்ப்பைக் கொண்டது.

இந்த மைதானத்தில் குறுகிய இடைவெளியில் இரண்டாவது போட்டி ஆரம்பிக்கப்படுவதால் ஆடுகளம் எதற்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கும் எனும் கேள்விகளும் எழுந்துள்ளது.

இலங்கை அணிக்கு இது சொந்த மைதானமாக இருந்தாலும் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றதால் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அவரகள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலி மைதானம் இலங்கைக்கு ராசியானதாய் இருந்தாலும் தற்போது அது எந்தளவுக்கு சாத்தியமாக இருக்கும் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. முதல் போட்டியில் ஆடுகளத்தின் தன்மை கடைசி நாளில் மாறியிருந்தது.

ஆகவே, ஆடுகளத்தின் சாதக பாதக தன்மைகளை கணித்துக்கொண்டு விளையாட வேண்டிய சூழல் இரண்டு அணிகளுக்குமே ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தைப் பொருத்தமட்டில் சகலதுறைகளிலும் பலம் பொருந்திய அணியாக களமிறங்குகின்றது. அவர்களின் சவால்களை முறியடித்து இலங்கை அணி வெற்றிபெறுவதென்பது சற்று கடினமானது.

ஆனாலும், முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை. அந்த வகையில் இலங்கை வீரர்கள் இந்தப் போட்டியிலாவது சுதாகரித்துக் கொண்டு விளையாடி வெற்றியை அண்மிக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.