July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கிந்தியத் தீவுகள் அணியை தோற்கடித்த பங்களாதேஷ்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. பங்களாதேஷுக்கு விஜயம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு இது பேரதிர்ச்சியாகும்.

கொரோனா முடக்கத்துக்கு பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பங்களாதேஷு க்கு சென்றுள்ளது. முதல் சர்வதேச போட்டி டாக்காவில் நடைபெற்றதுடன் இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துக்குள்ளானது.

முன்வரிசை விக்கெட்டுகள் வேகமாக வீழ்த்தப்பட்டதுடன் கைல் மேயர்ஸ் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றார். ரொவ்மன் பவல் 28 ஓட்டங்களையும், புதுமுக வீரரும், அணித்தலைவருமான ஜேஸன் மொஹமட் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

இரண்டு வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்ததுடன், பெரும்பாலானவர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணி 32.02 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஓராண்டு போட்டித்தடையின் பின்பு அணிக்கு திரும்பிய ஸகிப் அல் ஹசன் 7.2 ஓவர்கள் பந்துவீசி 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹஸான் முஹமட் 3 விக்கெட்டுகளையும், முஸ்டபிஸர் ரஹ்மான் 2 விக்கெட்டுகனையும் வீழ்த்தினர்.

இலகுவான இலக்கான 123 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி 33.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது. அணித்தலைவர் தமிம் இக்பால் 44 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிசெய்தார்.

ஸகிப் அல் ஹசன், முஸ்டபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 19 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிக்கு கொண்டுசென்றனர்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என பங்களாதேஷ் முன்னிலை பெற்றுள்ளது.