
டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையாத இந்திய அணியின் தலைவராக அஜின்கெயா ரஹானே நீடிக்கிறார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவதும், இறுதியுமான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதன் மூலம் அவர் இந்த சிறப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அஜின்கெயா ரஹானே தலைமையில் இந்திய அணி இதுவரை தோல்வியடைந்தது கிடையாது. இந்திய அணியை 5 போட்டிகளில் வழிநடத்தியுள்ள அஜின்கெயா ரஹானே அவற்றில் 4 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். மற்றைய போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இந்திய அணி பிரிஸ்பேனில் 74 வருடங்களுக்கு பின்னர் இந்தமுறை வெற்றிபெற்றமை சிறப்பம்சமாகும். பிரிஸ்பேன் மைதானத்தில் 1947 ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவுக்கு இதுவே முதல் வெற்றியாகும்.
அதேபோன்று அவுஸ்திரேலியா 32 வருடங்கள் கழித்து பிரிஸ்பேனில் முதல் தடவையாக தோல்வியடைந்துள்ளது. அவுஸ்திரேலிய அணி பிரிஸ்பேனில் இதற்கு முன்பு 1988 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.