இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்திலிருந்து குசல் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ்களில் ஓட்டமின்றி ஆட்டமிழந்த அவர் அதன் பிறகு 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்தே குசல் மெண்டிஸ் இலங்கை குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக புதுமுக வீரரான ரொஸேன் சில்வாவுக்கு இலங்கை குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லஹிரு குமார, நுவன் பிரதீப் ஆகியோரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக விக்கெட் காப்பாளரான மினோத் பானுகவும், வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப்பும் இலங்கை குழாத்துக்கு பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரத்ன இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவில் உபாதைக்குள்ளான அவர் அதிலிருந்து பூரண குணமடையாததே அதற்கு காரணம்.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை அணியை டினேஸ் சந்திமாலே வழிநடத்தவுள்ளார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெற்றிக்கிழமை காலியில் ஆரம்பமாகவுள்ளது.
டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் எனும் ஆட்டக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.