November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அணிக்கு 328 ஓட்டங்களை நிர்ணயித்தது அவுஸ்திரேலியா

நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி இலக்காக 328 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களை நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தப் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது. டேவிட் வோனர் 20 ஓட்டங்களுடனும், மார்க்கஸ் ஹெரிஸ் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

இவர்கள் மேலும் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மார்க்கஸ் ஹெரிஸ் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டேவிட் வோனர் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மொஹமட் ஸிராஜின் அபாரமான பந்துவீச்சுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் ஓட்டங்களைப் பெற முடியாமல் சிரமப்பட்டதுடன் விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

மானஸ் லபுசேன், கெமரூன் கிறீன் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடனும், மெத்திவ் வேட் ஓட்டமின்றியும் நடையைக் கட்டினர். ஸ்டீவன் ஸ்மித் 55 ஓட்டங்களைப் பெற, அவுஸ்திரேலிய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 294 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

மொஹமட் ஸிராஜ் 73 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், ஸர்துல் தாகூர் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், வொஸிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தமிழக வீரரான நடராஜன் 14 ஓவர்களை வீசிய போதிலும் அவரால் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 369 ஓட்டங்களையும், இந்தியா 336 ஓட்டங்களையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெற்றிபெற கடைசி நாளில் மேலும் 324 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.