அவுஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் 19.5 ஓவர்கள் பந்துவீசிய மொஹமட் ஸிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மானஸ் லபுசேன், ஸ்டீவன் ஸ்மித், மெத்திவ் வேட் உள்ளிட்ட வீரர்கள் மொஹமட் ஸிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
மொஹமட் ஸிராஜின் அபார பந்துவீச்சு காரணமாக அவுஸ்திரேலிய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 294 ஓட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள அவர், தந்தையின் ஆசிர்வாதத்தால் தன்னால் சிறப்பாக செயற்ப முடிந்தது என கூறியுள்ளார்.
இந்திய அணி இந்தத் தொடருக்காக நவம்பர் மாத நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துவிட்டது. டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மொஹமட் ஸிராஜின் தந்தை காலமானார். இதனால் நொந்துபோன அவரால் தற்போதைய கொரோனா பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள முடியவில்லை.
எனினும், டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டு தந்தையின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவேன் என மொஹமட் ஸிராஜ் உருக்கமாகக் கூறியிருந்தார். அதேபோன்று மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மொஹமட் ஸிராஜின் சிறப்பான பந்துவீச்சு ஆற்றலுடன் இந்தியா வெற்றிபெற்றது.
தற்போது பிரிஸ்பேனில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தந்தை உயிருடன் இருந்திருந்தால் இதனைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார் என மொஹமட் ஸிராஜ் கூறுகின்றார். இந்த ஆற்றலுக்கு தனது தந்தையின் ஆசிர்வாதமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற தந்தையின் கனவை நிறைவேற்றிய மகனாக பெருமிதம் கொள்வதாக மொஹமட் ஸிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மொஹமட் ஸிராஜ் மொத்தமாக 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.