January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெற்றியின் விளிம்பில் தடுமாறும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

(Photo: Englandcricket/Twitter)

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தடுமாற்றமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலகுவான இலக்கான 74 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடும் இங்கிலாந்து 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 135 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலளித்தாடிய இங்கிலாந்து 421 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்படி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 286 ஓட்டங்கள் தேவையான கட்டாயத்தில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சார்பாக வீரர்கள் முன்பைவிட சிறப்பாக விளையாடினார்கள்.

குறிப்பாக மிகவும் நிதனமாக விளையாடி இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தியமை அவர்களின் ஆட்டத்தின் மூலம் நன்கு புலப்பட்டது.

தொடர்ந்து ஓட்டமின்றி ஆட்டமிழந்துவந்த குசல் மென்டிஸ் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் களத்தில் நின்று 65 பந்துகளை எதிர்கொண்டு 15 ஓட்டங்களைப் பெற்றமை அவரது பொறுமையை எடுத்துக்காட்டியது.

குசல் ஜனித் பெரேரா 62 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

லஹிரு திரிமான்ன 76 ஓட்டங்களுடனும், லசித் எம்பல்தெனிய ஓட்டமின்றியும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

லசித் எம்புல் தெனியாவினால் ஓர் ஓட்டத்தையேனும் பெற முடியவில்லை. அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய லஹிரு திரிமான்ன தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை எட்டினார். இது 7 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் பெற்ற சதமாகும்.

லஹிரு திரிமான்ன முதல் சதத்தையும் இதே மைதானத்தில் பங்களாதேஸுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டில் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் உபாதை மற்றும் மோசமான துடுப்பாட்டத்தால் அவ்வப்போது வாய்ப்பை இழந்த அவர் நீண்ட இடைவெளியின் பின்னர் இந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

லஹிரு திரிமான்ன சுமார் 3 மணித்தியாலங்கள் வரை களததில் நின்று 251 பந்துகளை எதிர்கொண்டு 12 பௌண்டரிகளுடன் 111 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் டினேஸ் சந்திமால் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

வழமையாக அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் நிரோஸன் திக்வெல்லவும் இன்று மிகவும் பொறுமையாக துடுப்பெடுத்தாடி 74 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னாள் அணித்தலைவரான ஏஞ்சலோ மெத்யூஸ் 219 பந்துகளை சந்தித்து 4 பௌண்டரிகளுடன் 71 ஓட்டங்களைப் பெற்றார்.

இவ்வாறாக சகல வீரர்களின் பொறுமையான துடுப்பாட்டம், அதீத அக்கறையினால் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீண்ட இலங்கை அணி 74 ஓட்டங்களை இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

நான்காம் நாள் இறுதிக் கட்ட ஓவர்களில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அணித்தலைவர் ஜோ ரூட் ஓர் ஓட்டத்துடன் ரன் அவுட் ஆனதுடன் இந்த ஆட்டமிழப்பு இங்கிலாந்தை தடுமாற்றத்துக்குள்ளாக்கியது.

இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 38 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக தடைப்பட்டு அத்துடன் முடிவுக்குவந்தது.