January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காத்திருந்த ரசிகரை மனம் குளிர வைத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் ஜோ ரூட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணித் தலைவரான ஜோ ரூட் அபாரமாக இரட்டை சதமடித்தமை அனைவரும் அறிந்ததே.

எனினும், இந்த இரட்டை சதத்தின் போது அவர் கிரிக்கெட்டை நேசிக்கும் ரோபி லூவிஸ் என்பவரின் மனம் குளிரும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த காலக்கட்டத்தில் ரோபி லூவிஸும் இலங்கைக்கு வந்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக கொரோனா அச்சத்தால் இலங்கை முடக்கப்பட்டத்தை அடுத்து இங்கிலாந்து அணி திரும்பிச் சென்றது. எனினும், ரோபி லூவிஸினால் திரும்பிச் செல்ல முடியவில்லை.

கொரோனா முடக்கமும் இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் காரணமாகவும் கடந்த 9 மாதங்களாக இலங்கையிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ரோபி லூவிஸுக்கு ஏற்பட்டது.

இவ்வாறான சூழலில் இங்கிலாந்து அணி 9 மாதங்கள் கழித்து மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன் தற்போது முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்று வருகிறது.

ஆனாலும், போட்டியை நேரடியாக மைதானத்துக்கு போய் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு சந்தர்ப்பமில்லை. இதனால் ரோபி லூவிஸின் எதிர்பார்ப்பு மீண்டும் சங்கடத்துக்குள்ளானது.

இருந்த போதிலும் அதற்காக துவண்டுபோகாத அவர் காலி கோட்டையில் அமர்ந்தவாறு போட்டியை ரசித்துக்கொண்டிருந்தார்.

இதுபோன்ற ஒரு தருணத்தில் ஒரு வீரர் இரட்டை சதமடித்தால் அதனை கண்டுகளிப்பது எந்தளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

அதுவும் தாம் நேசிக்கும் அணியின் தலைவர் இரட்டை சதமடித்துவிட்டு ஏதோவொரு மூலையில் இருக்கும் தன்னை நோக்கி துடுப்பை தூக்கி அசைத்துக்காட்டி மகிழ்ச்சியை பகிர்ந்தால் அது எந்தளவுக்கு சிறப்பானது.

அந்த உண்ர்வையே இங்கிலாந்து அணித்தலைவரான ஜோ ரூட் தனது ரசிகரான ரோபி லூவிஸுக்கு கொடுத்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அதனைக் கண்டு மனம் குளிர்ந்த ரோபி லூவிஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து ஜோ ரூட்டின் துடுப்பாட்ட திறனுக்கும், மகத்துவம் மிக்க பண்புக்கும் தனது நன்றி கலந்த பாராட்டை தொலைவிலிருந்தே தெரிவித்துக் கொண்டார்.