இந்தியாவுக்கு எதிரான நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மானஸ் லபுசேனின் சிறப்பான சதத்துடன் அவுஸ்திரேலியா சவாலாக ஆரம்பித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மானஸ் லபுசேன் சதமடித்து அணியின் வீழ்ச்சியை சரிப்படுத்தினார்.
அடிலெய்டில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக தமிழக வீரரான நடராஜனுக்கு டெஸ்ட் அறிமுகம் கிடைத்தது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய மானஸ் லபுசேன் 204 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 108 ஓட்டங்களைப் பெற்றார். ஸ்டீவன் ஸ்மித் 35 ஓட்டங்களுடனும், மெத்திவ் வேட் 45 ஓடடங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
கெமரூன் கிறீன் 28 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் டிம் பெய்ன் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். அவுஸ்திரேலிய அணி 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல்நாள் ஆட்டநேரம் முடிவுக்குவந்தது.
நடராஜனின் பந்துவீச்சில் சதமடித்த மானஸ் லபுசேனும், மெத்திவ் வேடும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் அறிமுகமான சர்வதேச ஒருநாள், சர்வதேச இருபது20, டெஸ்ட் போட்டியிலும் ஆரம்பத்திலேயே விக்கெட் வீழ்த்திய வீரராக நடராஜன் பதிவாகியுள்ளார்.
தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிப்பதால் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கவல்லதாக இந்தப் போட்டி நடைபெறுகின்றது.