இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் இடையூறுக்கு மத்தியில் இடம்பெற்றது. இதில் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலளித்தாடும் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
அணித்தலைவர் ஜோ ரூட் 66 ஓட்டங்களுடனும், ஜொனி பெயார்ஸ்டோ 47 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜொனி பெயார்ஸ்டோவினால் மேலதிகமாக ஓர் ஓட்டத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனாலும், ஜோ ரூட்டுடன் அடுத்து இணைந்த அறிமுக வீரரான டான் லோவ்ரன்ஸ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 73 ஓட்டங்களைப் பெற்றார். இந்த ஜோடி மூன்றாம் விக்கெட்டுக்காக 173 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
254 பந்துகளை எதிர்கொண்ட ஜோ ரூட் 12 பௌண்டரிகளுடன் 168 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதுள்ளார். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டு சுமார் ஒரு மணிநேரத்துக்கு முன்பே முடிவுக்குவந்துவிட்டது. காலையிலும் சீரற்ற வானிலை காரணமாக ஆட்டம் தாமதமாகவே ஆரம்பமானது.
இரண்டாம் நாளில் 53 ஓவர்கள் மாத்திரமே வீச முடிந்ததுடன், 2 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு 193 ஓட்டங்கள் பெறப்பட்டன.
இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி இங்கிலாந்து அணி 185 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
பந்துவீச்சில் லசித் அம்புல்தெனிய 3 விக்கெட்டுகளையும், டில்ருவன் பெரேரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் மத்தியஸ்தராக ரஞ்சன் மடுகல்ல செயற்படுவதுடன், குமார் தர்மசேன, ருச்சிர பள்ளியகுரு ஆகியோர் பிரதான களநடுவர்களாக செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.