இலங்கையின் கிரிக்கெட்தரம் படுகுழியில் விழுந்துள்ளது என முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார கவலை வெளியிட்டுள்ளார்.
ஸ்கை தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 135 ஓட்டங்களுடன் முடிவுக்குவந்தது. அதுவும் சொந்த மைதானமான காலியில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்த விதம் மற்றும் இலங்கை அணியின் பின்னடைவு தொடர்பாக குமார் சங்கக்காரவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த குமார் சங்கக்கார, நிச்சயமாக இந்தப் பின்னடைவு திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. இது நீண்டகாலமாக இலங்கையில் முதல்தர கிரிக்கெட்டில் சிறந்ததொரு வழிமுறை இல்லாததால் ஏற்பட்டுள்ளது. திறமை வாய்ந்த பல வீரர்கள் கடந்த காலத்தில் இலங்கையிலிருந்து கிரிக்கெட் உலகுக்கு கிடைத்துள்ளார்கள்.
ஆனால், அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. சமீபகாலமாக சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் எவரையும் காணமுடியவில்லை. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்த விதம் அதனையே உணர்த்துகின்றது. சிறந்த வீரர்கள் உருவாகவில்லை என்றால் சிறந்த திட்டங்கள் இல்லை என்றே அர்த்தம் என்று தெரிவித்தார்.
ஒரு இன்னிங்ஸில் ஓரிரு வீரர்கள் தவறிழைத்து ஆட்டமிழக்கலாம். ஆனால், இலங்கை அணியின் சகல வீரர்களும் ஒரே தவறை இழைத்து அநாவசியமாக ஆட்டமிழந்தார்கள். அவர்களிடம், பொறுமையும், துடுப்பாட்ட சாதுரியமும் இல்லை என்பது தெரிந்தது. சிறந்த வீரர்கள் கிடைப்பார்கள். ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்ததில் காலமே வீணாகியுள்ளது. எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனவும் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த நேர்காணலின் போது கருத்து வெளியிட்ட இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவரான நசார் ஹு செய்ன், டெஸ்ட் போட்டியில் இதுபோன்றதொரு மோசமான துடுப்பாட்டத்தை தாம் கண்டதேயில்லை என குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையிலிருந்து உருவான அதிசிறந்த கிரிக்கெட் வீரர்களான சிதத் வெத்தமுனி, அர்ஜுன ரணதுங்க, மாவன் அத்தபத்து, சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன போன்றவர்களுக்கு இலங்கை அணி வீரர்கள் ஆட்டமிழந்த விதம் எத்தகைய உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் எனவும் நசார் ஹு செய்ன் விமர்சித்திருந்தார்.