July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வீரர்களின் துடுப்பாட்டம் வருத்தமளிக்கிறது; கிரான்ட் பிளவர்

‘‘இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தளவுக்கு மோசமாக துடுப்பெடுத்தாடியதை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களின் துடுப்பாட்டம் மிகுந்த வருத்தமளிக்கிறது’’ என இலங்கை அணியின் துடுப்பாட்ட ஆலோசகரான கிரான்ட் பிளவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவின் பின்னர் இணையத்தள தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் நாளில் இலங்கை அணி 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதுவே காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை அணி இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றுக்கொண்ட ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.

ஆட்டநேர முடிவின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கிரான்ட் பிளவர் பதிலளித்தார்.

இலங்கை அணியுடன் ஓராண்டு காலம் துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படும் தாம் இத்தகைய மோசமான துடுப்பாட்டத்தை இலங்கை அணி வீரர்களிடம் இதுவரை காணவில்லை என கூறினார்.

இலங்கை அணியின் இந்த நிலைமைக்கு சகல துடுப்பாட்ட வீரர்களும் பொறுப்புக் கூறியாக வேண்டும் எனவும் அவர்கள் மிகுந்த அக்கறையெடுத்து துடுப்பெடுத்தாடவில்லை என்பதை அவர்களின் ஆட்டமிழப்புகள் எடுத்துக்காட்டுகின்றன எனவும் கிரான்ட் பிளவர் குறிப்பிட்டார்.

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியொன்றில் மைதானத்தின் சாதகத் தன்மையை உள்நாட்டு அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செயற்படுவதற்கு இலங்கை அணி வீரர்கள் அனைவரும் தவறியுள்ளார்கள் எனவும் கிரான்ட் பிளவர் தெரிவித்தார்.

இதேவேளை, குசல் மென்டிஸ் தொடர்ச்சியாக ஓட்டமின்றி ஆட்டமிழக்கின்றமை மற்றும் அவரது துடுப்பாட்ட பாணி தொடர்பாக ஊடகவியலாளர்கள் கிரான்ட் பிளவரிடம் வினவினர்.

அதற்கு பதிலளித்த அவர், குசல் மென்டிஸின் துடுப்பாட்டத்தில் தொழில்நுட்ப ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லாத போதிலும் அவர் முழுக்கவனம் செலுத்தி துடுப்பெடுத்தாடாமல் தவறிழைக்கிறார் என சுட்டிக்காட்டினார்.

தேவையற்ற பந்தை அவர் அடித்தாட போய் ஆட்டமிழந்தார் எனவும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி பந்தை சரியாகக் கணித்து துடுப்பெடுத்தாட வேண்டியதே அவசியம் எனவும் இலங்கை அணி வீரர்களை உளரீதியாக பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென தாம் உணர்வதாகவும் கிரான்ட் பிளவர் மேலும் தெரிவித்தார்.

குசல் மென்டிஸ் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஓட்டமின்றி ஆட்டமிழந்த அதேவேளை, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியை விஞ்சுவதற்கு இங்கிலாந்துக்கு இன்னும் 8 ஓட்டங்களே தேவைப்படுவதுடன் 8 விக்கெட்டுகள் கைவசமுள்ளன.