இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியானது தொடரை வெற்றிகொள்ளும் அணி எதுவென்பதை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.
தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்றன. மூன்றாவது போட்டி இந்திய அணி வீரர்களின் சாதுரியத்தால் வெற்றி-தோல்வியின்றி முடிந்தது. இதனால் தொடரின் தீர்மானமிக்க போட்டியாக நான்காவது போட்டி உள்ளது.
இந்திய அணியின் இந்த விஜயத்தை பொறுத்தவரை ஒருநாள் தொடரை 2-1 என இழந்தது. எனினும், இருபது 20 தொடரை 2-1 என கைப்பற்றி சவால் விடுத்தது. இந்நிலையில் நடைபெறும் டெஸ்ட் தொடரும் இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது.
அணித்தலைவர் விராத் கோஹ்லி இன்றியே இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரில் இந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் ஆற்றல் பிரகாரம் நான்காவது போட்டியில் இந்திய அணியால் சரித்திரத்தை மாற்றியமைக்கவும் முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணி பிரிஸ்பேனில் 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெற்றிபெற்றதில்லை. சேத்தன் சர்மா தலைமையில் அப்போது இந்திய அணி வெற்றிபெற்றதுடன், அதன் பிறகு பிரிஸ்பேன் மைதானத்தில் 6 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி அவற்றில் தோல்வியையே சந்தித்துள்ளது.
ஆனாலும் இந்த வருடம் அந்த வரலாறு மாற்றி எழுதப்படும் என முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் உட்பட இந்திய கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்திய அணி வீரர்கள் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விதமே அதற்குக் காரணம்.
குறிப்பாக இந்தியா தோல்வியடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உபாதையுடன் விளையாடிய ஹனுமா விஹாரியும், ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்திய அணியின் துடுப்பாட்ட பலத்தை நிரூபித்தனர்.
எவ்வாறாயினும், ரவீந்ர ஜடேஜா, ஹனுமா விஹாரி, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இந்தப் போட்டியில் காயம் காரணமாக விளையாடமாட்டார்கள். இந்திய அணி முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இன்றியே நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது.
தமிழக வீரரான நடராஜனுக்கு இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாட இந்தப் போட்டியில் சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியை இந்திய அணி உபாதை காரணமாக சிக்கலுடன் எதிர்கொள்கின்றது என்பதே உண்மை நிலை.
மறுபக்கம் டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்குகின்றது. ஸ்டீவன் ஸ்மித் மூன்றாவது போட்டியில் தனது வழமையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆற்றலுக்கு திரும்பியுள்ளார்.
டேவிட் வோனர், மானஸ் லபுசேன் போன்ற வீரர்கள் மீதே அவுஸ்திரேலியா அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளது. நான்காவது போட்டியில் வெற்றிபெறும் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.