ஸ்பெய்னின் லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் அத்லடிகோ மெட்ரிட் கழக அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. செவில்லா கழக அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என வெற்றிபெற்றதன் மூலம் அத்லடிகோ மெட்ரிட் அணி இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளது.
போட்டியின் முதல் பாதியில் அத்லடிகோ மெட்ரிட் அணி சார்பாக கொரோரா முதல் கோலை போட்டார். 17 ஆவது நிமிடத்தில் அந்த கோல் பெறப்பட்டது. செவில்லா கழக அணி வீரர்களால் கோல் போட முடியாது போக முதல் பாதி 1-0 என அத்லடிகோ மெட்ரிட் அணி வசமானது.
இரண்டாம் பாதியிலும் சிறப்பாக விளையாடிய அத்லடிகோ மெட்ரிட் அணி வீரர்கள் 76 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடைந்தனர். சௌவ்ல் அந்த கோலைப் போட்டார்.
செவில்லா கழக அணி வீரர்கள் கோல் போட கடும் பிரயத்தனம் எடுத்த போதிலும் அவர்களின் எந்த முயற்சியும் கைகூடவில்லை. இறுதியில் 2-0 என அத்லடிகோ மெட்ரிட் அணி வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலம் அத்லடிகோ மெட்ரிட் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றியது. 16 போட்டிகளில் விளையாடியுள்ள அத்லடிகோ மெட்ரிட் அணி 13 வெற்றிகள், 2 தோல்விகளுடன் 41 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
18 போட்டிகளில் 11 வெற்றிகளைப் பெற்றுள்ள ரியால் மெட்ரிட் அணி 37 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பார்ஸிலோனா அணி 18 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்று 34 புள்ளிகளுடனும் இரண்டாம், மூன்றாமிடங்களில் உள்ளன.