அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவுற்றதை அடுத்து துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் வெளியிட்டுள்ளது.
இதில் நியூஸிலாந்து அணித்தலைவரான கேன் வில்லியம்ஸன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி இரட்டை சதமும், சதமும் பெற்றதன் மூலம் முதலிடத்தை வகிக்கிறார்.
இரண்டாமிடத்திலிருந்த இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி மூன்றாமிடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அந்த இடத்தை அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவன் ஸ்மித் பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாம் இன்னிங்ஸில் அரைச்சதமும் பெற்றதன் மூலம் ஸ்மித் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மானஸ் லபுசேன் நான்காமிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆறாமிடத்தையும், இந்தியாவின் அஜின்கெயா ரஹானே ஏழாமிடத்தையும், செட்டிஸ்வர் புஜாரா எட்டாமிடத்தையும் பெற்றுள்ளனர். அவுஸ்திரேலியாவின் ஹென்ரி நிகோல்ஸ் ஒன்பதாமிடத்திலும், டேவிட் வோனர் பத்தாமிடத்திலும் இருக்கின்றனர்.