January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய ஓபனில் கலந்துகொள்ளும் வீரர்கள் தனிமைப்படுத்தல்

அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கும் சகல வீர, வீராங்கனைகளையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க போட்டி ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது. 14 நாட்கள் கழித்து வீர, வீராங்கனைகள், பயிற்றுநர்கள், நடுவர், அதிகாரிகள் என அனைவரிடமும் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

சர்வதேச டெனிஸைப் பொறுத்தவரை ஓராண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் நடத்தப்படுவது வழமையாகும். அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய தொடர்களே அவை.

இவற்றில் வருடாந்தம் முதல் அம்சமாக அவுஸ்திரேலிய ஓபன் ஜனவரி மாத நடுப்பகுதியில் மெல்போர்னில் ஆரம்பமாகும். எனினும், இவ்வருடம் கொரோனா அபாய நிலைமை காரணமாக தொடர் எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளது.

தொடர் ஆரம்பமாக முன்பு அதில் பங்கேற்கும் அனைவரையும் மெல்போர்னிலும், அடிலெய்டிலும் தனிமைப்படுத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது. இந்தமுறை வீர, வீராங்கனைகள், அதிகாரிகள் உட்பட 1200 பேர் வரை பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடம் வகிக்கும் சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச், ஸ்பெய்னின் ரபாயெல் நடால், வீராங்கனைகளான ருமேனியாவின் சிமோனா ஹலெப், ஜப்பானின் நஓடி ஒசாகா ஆகியோரை மெல்போர்னில் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீர, வீராங்கனைகள் பாதுகாப்பு வலயத்திலுள்ள தங்குமிடத்திலிருந்து சுமார் 5 மணிநேரத்துக்கு மாத்திரமே பயிற்சிக்காக அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றும் கண்காட்சி போட்டியொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.