அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய குழாத்திலிருந்து ஹனுமா விஹாரியும் ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக விலகியுள்ளனர். இவர்கள் இருவருமே சிட்னியில் முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்தனர்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், துடுப்பெடுத்தாடும் போது அவருக்கு இட கையில் பெருவிரலில் காயமேற்பட்டது. இதனால் அவர் இரண்டாம் இன்னிங்ஸில் பந்து வீசவில்லை.
ரவீந்திர ஜடேஜா எதிர்வரும் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உபாதையுடன் 161 பந்துகளை எதிர்கொண்டு இந்திய அணியை தோல்வியடையாமல் பாதுகாத்த ஹனுமா விஹாரியும் நான்காவது போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை வலுவடைந்துள்ளதால் குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு அவர் ஓய்வெடுக்கவேண்டுமென வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த இரண்டு வீரர்களும் நான்காவது போட்டியில் இல்லையென்பதால் அவருக்கு பதிலாக மாற்று வீரர்களை தெரிவுசெய்வதில் இந்திய கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.