July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஸ்வின் – விஹாரியின் பொறுமையான ஆட்டத்தால் 3வது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவு

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஜோடியின் பொறுமையான துடுப்பாட்டத்தால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது.

இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இணைந்துகொண்ட அஸ்வினும் விஹாரியும் 43 ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட் கொடுக்காமல் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் எதிர்பார்ப்பை சிதறடித்தது.

சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஐந்தாம் நாளான இன்று 2 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்களுடன் இந்தியா இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது. அதன்படி இந்தியா வெற்றிபெற கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்த நிலையில் மேலும் 307 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்தது.

அணித்தலைவர் அஜின்கெயா ரஹானே 4 ஓட்டங்களுடனும் செட்டிஸ்வர் புஜாரா 9 ஓட்டங்களுடனும் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர். ரஹானேவினால் மேலதிகமாக ஓர் ஓட்டத்தைக் கூடப் பெற முடியவில்லை.

ஆனாலும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ரிஸப் பாண்ட் 97 ஓட்டங்களையும் செட்டிஸ்வர் புஜாரா 77 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியை வலுப்படுத்தினர். இவர்கள் இருவரும் நான்காம் விக்கெட்டுக்காக 148 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

செட்டிஸ்வர் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரராகப் பதிவானார். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு அவுஸ்திரேலியா வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கிய அஸ்வின் மற்றும் விஹாரி ஜோடி மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டுவந்தது.

ஹனுமா விஹாரி 161 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 128 பந்துகளில் 39 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். இவர்கள் இருவரும் உபாதையுடனேயே இந்த ஆற்றலை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 338 ஓட்டங்களையும் இந்தியா 244 ஓட்டங்களையும் பெற்றதுடன் இரண்டாம் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்களைப் பெற்று நான்காம் நாளில் ஆட்டத்தை நிறுத்தியது.

வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 407 ஓட்டங்களை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஐந்தாம் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வர போட்டி வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியது.