அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை அவுஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி கோஷம் எழுப்பி வசைபாடி தூற்றியுள்ள தனையடுத்து உடனடியாக கண்காணிக்கப்பட்ட ஆறு ரசிகர்களை அரங்கிலிருந்து வெளியேற்றியதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டியில் மூன்றாம் நாளான நேற்றும் இனவெறி வார்த்தைப் பிரயோகங்களை இந்திய வீரர்களான ஸஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஸிராஜை இலக்கு வைத்து ரசிகர்கள் வசைபாடியதாக நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த ரசிகர்கள் இனவெறியைத் தூண்டும் விதத்தில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் மொஹமட் ஸிராஜும், பும்ராவும் அணித்தலைவர் ஊடாக நடுவரிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் நான்காம் நாள் போட்டியிலும் இதேநிலை தொடர்ந்துள்ளது. இந்திய வீரர்களை குறிவைத்து ரசிகர்கள் சிலர் இனவெறி கோஷங்களை எழுப்பியதனை மொஹமட் ஸிராஜ் அவதானித்துள்ளார். இதனால் அவர் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு அணித்தலைவர் அஜின்கெயா ரஹானேவிடம் விடயத்தைக்கூறி புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆட்டம் சுமார் 10 நிமிடங்கள் வரை தடைப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆறு ரசிகர்களும் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னரே ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. இனவெறியை தூண்டும் விதமாக பேசுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.