July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காயங்களால் அவதிப்படும் இந்திய வீரர்கள்; அவுஸ்திரேலியா ஆதிக்கம்

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.துடுப்பாட்டத்தின் போது ரிஸப் பாண்ட், ரவீந்ர ஜடேஜா ஆகியோர் உபாதைக்குள்ளாகி விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 338 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

செட்டிஸ்வர் புஜாரா 9 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் அஜின்கெயா ரஹானே 5 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இவர்களால் மூன்றாம் நாளில் மேலும் 21 ஓட்டங்களையே பகிர முடிந்தது. அணித்தலைவர் அஜின்கெயா ரஹானே 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய செட்டிஸ்வர் புஜாரா அரைச்சதமடித்து 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ரிஸப் பாண்ட் 36 ஓட்டங்களுடன் வெளியேற ரவீந்ர ஜடேஜா 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.

ஆனால், இந்த இரண்டு வீரர்களுமே உபாதைக்குள்ளாகி இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு மாற்று வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறிய இந்திய அணி 244 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து கடும் தடுமாற்றத்துக்குள்ளானது.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜொஸ் ஹசல்வூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன், மூன்று வீரர்கள் ரன் அவுட் ஆகினர். ஹனுமா விசுரி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரே ரன் அவுட் ஆகினர்.

94 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்தது. டேவிட் வோனர் 12 ஓட்டங்களுடனும் வில் பிகொவ்ஸ்கி 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
நான்காம் நாள் ஆட்டம் பெரும்பாலும் வெற்றிபெறும் அணியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.