January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2020: பஞ்சாப்பை வீழ்த்துமா டெல்லி?

13 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் இருபது20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று ஆரம்பமானது. இன்றைய ஆட்டத்தில் லோகேஸ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெபிடெல்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.

இந்த அட்டத்தைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுமே இளம் தலைமைகளுடன் களமிறங்குகின்றன. கடந்த காலத்தில் துடுப்பாட்டத்தில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் மூலம் லோகேஸ் ராகுலுக்கும், ஸ்ரேயாஸ் ஐயருக்கும் அணித்தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது.

Photo: BCCI/IPL

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தமுறை டெல்லி கெபிடெல்ஸ் அணிக்காக விளையாடுகின்றார். இது பஞ்சாப் அணியின் குறைநிறைகளை டெல்லி அணி வீரர்கள் முன்கூட்டியே அறிவதற்கான சந்தர்ப்பமாகவே கருதப்படுகிறது.

பெருமளவு கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட- இருபது20 நட்சத்திர அதிரடி நாயகன் – மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், அவுஸ்திரேலியாவின் கிளென் மெக்ஸ்வெல், மயங்க் அகர்வால் ஆகியோர் ஓட்டங்களைக் குவிக்கும் வல்லமை படைத்தவர்களாக கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியை பலப்படுத்துகின்றனர்.

இந்தியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சமி, மேற்கிந்தியத் தீவுகளின் ஸெல்டொன் கொட்ரேல் ஆகியோர் பந்துவீச்சில் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

“துடுப்பாட்டப் படை”

Photo: BCCI/ IPL

டெல்லி கெபிடெல்ஸைப் பொறுத்தமட்டில் எதிரணி எத்தனை ஓட்டங்கள் குவித்தாலும் அதனை துரத்திப் பிடிக்கும் துடுப்பாட்ட படையை தன்னகத்தே கொண்டுள்ளதாகவே காணப்படுகின்றது. இந்தியாவின் ஸிகர் தவான், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்திவ் ஸா, ரிஸப் பாண்ட், மேற்கிந்தியத் தீவுகளின் ஸிம்ரோன் எட்மயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் சூழ்நிலைக்கேற்றவாறு துடுப்பாடக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெறுகின்றமை அணிக்கு கூடுதல் பலமாகவுள்ளது. டெல்லி கெபிடெல்ஸ் அணியின் பந்துவீச்சுக் கூட்டணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான தென்ஆபிரிக்காவின் கெகிஸோ ரபாடா, இந்தியாவின் இசாந்த் சர்மா மற்றும் சுழல்பந்துவீச்சில் மிரட்ட ரவிச்சந்திரன் அஸ்வினுடன், அக்ஸார் பட்டேலும் இருப்பதால் சகலதுறைகளிலும் பலம் பொருந்திய அணியாகவே டெல்லி கெபிடெல்ஸ் அணி காட்சியளிக்கின்றது.

எவ்வாயினும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் மின்னொளியில் நடைபெறும் போட்டிகளின் போது முதலில் துடுப்பாடும் அணி கூடுதல் ஓட்டங்களைப் பெற வாய்ப்புள்ளது. இதனால் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் 200 ஓட்டங்களுக்கு மேல் குவிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால், அந்த ஓட்ட எண்ணிக்கை டெல்லி கெபிடெல்ஸ் அணிக்கு அவ்வளவு சிரமமானதல்ல என்றே கூறவேண்டும். டெல்லி அணியின் துடுப்பாட்ட பலம் அந்தளவுக்கு சிறப்பாக உள்ளது.