இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது இலங்கையில் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் இலங்கை விஜயம் செய்தனர். ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தை அடைந்த அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சுழல்பந்துவீச்சாளரான மொயீன் அலிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து மொயீன் அலி தனிமைப்படுத்தப்பட்டதுடன் இந்த விவகாரம் சற்று பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கோணத்தில் நோக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மொயீன் அலி உட்பட இங்கிலாந்து கிரிக்கெட் குழாத்தின் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் எவருக்கும் கொரோனா இல்லை என மீண்டும் மருத்துவ சான்றிதழ் கிடைத்தது. மொயீன் அலிக்கும் தொற்று ஏற்படவில்லை என்றே மருத்துவ சான்றிதழ் வெளியானது.
அதன்படி மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் இணைந்துகொள்ளும் வாய்ப்பை மொயீன் அலி பெற்றார். இங்கிலாந்து குழாம் வீரர்கள் இன்னும் சில நாட்களுக்கு ஹம்பாந்தோட்டையில் தங்கியிருப்பதுடன் அதன் பின்பு காலிக்கு சென்று இறுதிக் கட்டப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
இங்கிலாந்து வீரர்கள் எவருக்கும் கொரோனா இல்லை என மருத்துவ சான்றிதழ் கிடைத்துள்ளதால் போட்டித் தொடர் எந்தத் தங்குதடையுமின்றி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 போட்டிகளுமே காலியில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.