இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஏற்கனவே இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளதால் இந்தப் போட்டி யாருக்கு சாதகமாகவுள்ளதெனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சிட்னி மைதானத்தைப் பொறுத்தவரை இந்திய அணி 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதில்லை. அப்போது பிஸன் சிங் பேடி தலைமையில் இன்னிங்ஸ் மற்றும் 2 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்றதே வரலாறாக உள்ளது.
இந்த மைதானத்தில் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதுடன், 6 போட்டிகளை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே அஜின்கெயா ரஹானே தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கின்றது. இந்தப் போட்டியில் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளமை அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
நட்சத்திர வீரர்களான விராத் கோஹ்லியும் , ரோஹித் சர்மாவும் இல்லாமலேயே வெற்றிபெற்ற இந்திய அணிக்கு சர்மாவின் வருகை நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. மயன்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளதுடன், புதுமுக வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரரான நடராஜனுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படாது என்றே கூறப்படுகிறது. மற்றொரு சிறந்த துடுப்பாட்ட வீரரான லோகேஸ் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளதுடன் இது அணிக்கு சற்று பின்டைவையே ஏற்படுத்தும்.
மறுபக்கம் இரண்டாவது போட்டியில் பிரகாசிக்கத் தவறிய அவுஸ்திரேலியா சார்பாக அதிரடி வீரரான டேவிட் வோனர் களமிறங்குகின்றார். அவரின் வருகை அவுஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. என்றாலும் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பெட்டின்சன் உபாதை காரணமாக விலகியுள்ளார்.
இரண்டு அணிகளும் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் இது நேருக்கு நேர் சந்திக்கும் 101 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இந்தியா 29 போட்டிகளிலும், அவுஸ்திரேலியா 43 போட்டிகளிலும் பெற்றிபெற்றுள்ளன. 27 போட்டிக்ள வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளன.
எனவே இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுவார் எனும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.