January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுவிட்ஸர்லாந்திலும் பிரகாசித்த இலங்கை வீரர் யுப்புன் அபேகோன்!

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றுவரும் சர்வதேச தடகள போட்டிகளின் 100 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் அதிவேக குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் பெலின்ஸோனா நகரில் நடைபெற்றுவரும் Gala dei Castelli சர்வதேச தடகளப் போட்டிகளில் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் பலருடன் யுப்புன் அபேகோனும் பங்கேற்றார். 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்காவின் அகானி சிம்பினே (Akani Simbine) மற்றும் கனிஷ்ட உலக சாம்பியனான இத்தாலியின் பிலிப்போ டோர்டு (Filippo Tortu) ஆகியோர் இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.

அகானி சிம்பினே 10.02 நொடிகளிலும் பிலிப்போ டோர்டு 10.07 நொடிகளிலும் யுப்புன் அபேகோன் 10.24 நொடிகளிலும் 100 மீட்டர் தூரத்தை ஓடி முடித்தனர். தற்போது இத்தாலியில் தங்கியிருக்கும் யுப்புன் அபேகோன், ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் தூரத்தை 10.16 நொடிகளில் ஓடி தெற்காசிய மற்றும் இலங்கை சாதனைகளை நிலைநாட்டியதும் குறிப்பிடத்தக்கது.