July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திமுத் கருணாரத்னவின் பொறுமையான துடுப்பாட்டத்தால் இலங்கைக்கு ஆறுதல்

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, திமுத் கருணாரத்னவின் நிதானமான துடுப்பாட்டத்தால் ஆறுதலடைந்துள்ளது.

ஜொஹன்னஸ்பேர்கில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 157 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

டீன் எல்கர் 92 ஓட்டங்களுடனும், வென் டர் டசன் 18 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். சதமடித்த டீன் எல்கர் 127 ஓட்டங்களைப் பெற்றார். வென் டர் டசன் 67 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஏனைய எந்த வீரராலும் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை. பெப் டு பிலெசி, அணித்தலைவர் குவின்டன் டி கொக், டெம்பா பவுமா உள்ளிட்ட வீரர்கள் 20 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

தென் ஆபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் 302 ஓட்டங்களுடன் முடிவுற்றது.விஸ்வ பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளையும், அறிமுக வீரரான அசித பெர்னாண்டோ, தசுன் சானக ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எவ்வாறாயினும், முதல் போட்டியில் உபாதைக்குள்ளான வனிந்து ஹசரங்க இந்தப் போட்டியில் இடம்பெற்றுள்ள போதிலும் அவரால் 4 ஓவர்களையே வீசமுடிந்தது.

தென் ஆபிரிக்கா 145 ஓட்டங்களால் முன்னிலைபெற அந்த எண்ணிக்கையைப் பெற்றாலே இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கலாம் என்ற கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் முதல் விக்கெட் ஓர் ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.

குசல் ஜனித் பெரேரா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். திமுத் கருணாரத்னவும் லஹிரு திரிமான்னவும் இரண்டாம் விக்கெட்டுக்காக 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். லஹிரு திரிமான்ன 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து குசல் மென்டிஸ் ஓட்டமின்றி வெளியேற இலங்கை அணி மீண்டும் சிக்கலுக்குள்ளானது. குசல் மென்டிஸ் முதல் இன்னிங்ஸிலும் ஓட்டமின்றி ஆட்டமிழந்ததுடன் அவர் சமீப காலமாக தொடர்ச்சியாக சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

அறிமுக வீரரான மினோத் பானுகவினால் ஓர் ஓட்டத்தையே பெற முடிந்தது. இலங்கை அணி 109 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனாலும், தனி ஒருவராக பிரகாசித்த அணித்தலைவர் திமுத் கருணாரத்ன அரைச்சதமடித்து இலங்கை அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார்.

116 பந்துகளை சந்தித்த அவர் 17 பௌண்டரிகளுடன் 91 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார்.
நிரோஸன் திக்வெல்ல 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் முன்னிலை அடைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களைப் பெற்ற இலங்கைக்கு இது பெறும் ஆறுதலைக் கொடுத்துள்ளது.
லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்ட்ஜி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.