January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை

கொரோனா தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கு இலக்கான ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஐந்து பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியை சிட்னியில் எதிர்கொள்ளவுள்ளது. என்றாலும், சிட்னியில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இரண்டு அணிகளின் வீரர்களும் மெல்பேர்னில் தங்கியிருந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று ரோஹித் சர்மா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் மெல்பேர்னில் ஹோட்டலுக்கு சென்று உணவருந்தும் காட்சி டுவிட்டரில் வெளியானது.

இதனையடுத்து பெரும் பூதாகரமான இந்த விவகாரத்தால் சுகாதார நெறிமுறைகளை மீறியதாக குறித்த 5 இந்திய வீரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ரோஹித் சர்மா, ரிஸப் பந்த், சுப்மன் கில், பிரித்திவ் ஸோ, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து வீரர்களுக்கே இந்த நெருக்கடி ஏற்பட்டது. இந்த ஐந்து வீரர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

எவ்வாறாயினும், இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் இந்திய கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.

இதனால் இவர்கள் ஐந்து பேரும் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது என நம்பப்படுகிறது.

ஐ.பி.எல் போட்டிகளின் போது உபாதைக்குள்ளான ரோஹித் சர்மா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச இருபது20, சர்வதேச ஒருநாள் தொடர்களையும், டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் இழந்தார்.

அதன் பிறகு உடற்தகுதியை நிரூபித்து கடந்த மாதம் 14 ஆம் திகதிக்கு பின்பு அவுஸ்திரேலியாவை சென்றடைந்த அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விட்டே இந்திய அணியுடன் இணைந்துகொண்டார்.