January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய அரபு கிரிக்கெட் வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை!

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் வீரர்கள் இருவரை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இடைநிறுத்தப்பட்டுள்ள ஆமிர் ஹயாத், அஷ்பக் அஹ்மத் ஆகிய இருவரும் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க நேற்று 13-ம் திகதி முதல் 14 நாட்களுக்கு ஐசிசி அவகாசம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இருபது20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின்போது அஷ்பக்கை ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை இடைநிறுத்தியிருந்தது.

ஆனால், விசாரணைகள் முடியாத படியால் அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் அப்போது அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஐசிசியின் மோசடி தடுப்பு விதிகளின் கீழ் இவர்கள் இருவரின் மீது இப்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

38 வயதான ஹயாத் 9 ஒருநாள் போட்டிகளிலும் 4 இருபது20 போட்டிகளிலும், 35 வயதான அஷ்பக் 16 ஒருநாள் போட்டிகளிலும் 12 இருபது20 போட்டிகளிலும் தங்களின் நாட்டுக்காக விளையாடியுள்ளனர்.