July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென் ஆபிரிக்காவின் ஆதிக்கத்தால் தடுமாறும் இலங்கை

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவின் ஆதிக்கத்துக்கு மத்தியில் இலங்கை அணி தடுமாற்றமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜொஹன்னஸ் பேர்க்கில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 32 பந்துகளை எதிர்கொண்ட போதிலும் அவரால் 2 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா 60 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலைக்கு கொண்டு சென்றார்.

லஹிரு திரிமான்ன 17 ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸ் ஓட்டமின்றியும், மினோத் பானுக, நிரேஸன் திக்வெல்ல, தசுன் ஸானக ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களையும், துஸ்மந்த சமீர 22 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு சற்று ஆறுதல் அளித்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் அன்ரிச் நோட்ஜி 56 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், வியான் மல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலளித்தாடும் தென் ஆபிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களைப் பெற்று முதல் நாளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. அய்டன் மக்ரம் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் டீன் எல்கர் 92 ஓட்டங்களையும், ரெஸி வென்டர் டசன் 40 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

அறிமுக வீரரான அஸித பெர்னாண்டோவின் பந்து வீச்சில் அய்டன் மக்ரம் ஆட்டமிழந்தார்.
போட்டியின் முழு ஆதிக்கத்தை தென் ஆபிரிக்கா வெளிப்படுத்தப் போகின்றது என்பது முதல் நாள் ஆட்டத்திலேயே வெளிப்பட்டுள்ளது.