January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லா லீகாவில் முதலிடத்தில் ரியால் மெட்ரிட்

ஸ்பெய்னின் லா லீகா கால்பந்தாட்டத் தொடரின் புள்ளிகள் பட்டியலில் ரியால் மெட்ரிட் கழக அணி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. செல்டா விகோ கழக அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என வெற்றிபெற்றதன் மூலம் ரியால் மெட்ரிட் அணி இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

மெட்ரிடில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியின் ஆறாவது நிமிடத்தில் லுகாஸ் வெகுஸ் முதல் கோலைப் போட்டார். அதன்படி 1-0 எனும் கோல் கணக்கில் ரியால் மெட்ரிட் அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் மார்கோ அசென்ஸ் 53 ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இது இந்தப் போட்டி பருவ காலத்தில் அவர் போட்ட முதல் கோலாகும். அதற்கமைய ரியால் மெட்ரிட் அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

சேல்டா விகோ கழக அணி வீரர்கள் கோல் போட கடும் மயற்சிகளை எடுத்த போதிலும் அவை பலனளிக்கவில்லை. இறுதியில் 2-0 என போட்டி ரியால் மெட்ரிட் அணி வசமானது. இந்த வெற்றி ரியால் மெட்ரிட் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கும் கொண்டு சென்றது.

லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் 17 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரியால் மெட்ரிட் அணி 11 வெற்றிகள், 3 சமநிலை, 3 தோல்விகளுடன் 36 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

14 போட்டிகளில் 11 வெற்றிகள், 2 சமநிலை, ஒரு தோல்வியுடன் 35 புள்ளிகளைப் பெற்றுள்ள அத்லடிகோ மெட்ரிட் அணி இரண்டாமிடத்தில் இருக்கிறது. ரியால் சொஸியடேட் அணி 17 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 35 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது.