November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்

Photo: Facebook/ Pakistan Cricket Board

நியுஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகுந்த போராட்டத்தின் பின்னர் முதல் இன்னிங்ஸில் 297 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது.

கிறைஸ்சேர்ச்சில் நடைபெறும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இளம் வீரரான மொஹமட் ரிஸ்வான் வழிநடத்துகிறார். அணித்தலைவர் பாபர் அசாம் உபாதைக்குள்ளானதே அதற்குக் காரணம்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 4 ஓட்டங்களுக்கு முதுல் விக்கெட்டை இழந்தது. ஸான் மசூட் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அபிட் அலி, ஹாரிஸ் சொஹைல், பவாட் ஆலம் ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனாலும், முன்னாள் அணித்தலைவர் அசார் அலியும் இந்தப் போட்டியின் அணித்தலைவரான மொஹமட் ரிஸ்வானும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி பாகிஸ்தானை கௌரவமான நிலைக்கு கொண்டுவந்தனர்.

மொஹமட் ரிஸ்வான் 61 ஓட்டங்களையும், அசார் அலி 172 பந்துகளை எதிர்கொண்டு 12 பௌண்டரிகளுடன் 93 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்வரிசையில் பஹீம் அஸ்ராப் மற்றும் ஸபார் கோஹார் ஜோடி தமது துடுப்பாட்டத்திறனை வெளிப்படுத்தியது. பஹீம் ஆலம் 88 பந்துகளை எதிர்கொண்டு 48 ஓட்டங்களையும்,  ஸபார் கோஹார் 62 பந்துகளில் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் முதல் நாள் ஆட்டநேர முடிவை நெருங்கியிருந்த போது 297 ஓட்டங்களுடன் முடிவுக்குவந்தது.

கைல் ஜேமிஸன் 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி, ட்ரென்ட் பௌல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.