இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜொஹன்னஸ்பேர்க் வொன்டர்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை சமநிலையில் முடித்துக்கொள்ள முடியும்.
முதல் போட்டியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. என்றாலும் இந்தப் போட்டியை வெற்றிகொள்வதை விடுத்து ஐந்து நாட்களும் திடகாத்திரமாக விளையாடக்கூடிய வீரர்களை கண்டறிவதே கடினமாகவுள்ளதென இலங்கை அணியின் இன்றைய நிலைமையாக இருக்கிறது.
முதல் போட்டியில் இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா, கசுன் ராஜித, லஹிரு குமார, டினேஸ் சந்திமால், வனிந்து ஹசரங்க ஆகியோர் உபாதைக்குள்ளானார்கள். அவர்களில் தனஞ்சய டி சில்வாவும், டினேஸ் சந்திமாலும் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனஞ்சய டி சில்வா குணமடைவதற்கு இன்னும் சில வாரங்கள் செல்லும் என்பதுடன், அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இழந்துள்ளார். டினேஸ் சந்திமால் நூறு வீத உடற்தகுதியைப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஓஸத பெர்னாண்டோ இலங்கை அணியில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அவரும் உடற்தகுதியில் இல்லை என்றே கூறப்படுகிறது. எல்.பி.எல் போட்டிகளின் போது உபாதைக்குள்ளான அவர் அதிலிருந்து இன்னும் பூரண குணமடையும் உடற் பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர்களின் பற்றாக்குறையுடன் களமிறங்கத் தயாராகியுள்ளது. லசித் அம்புல்தெனிய மற்றும் புதுமுக வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் போட்டிக்கு தெரிவுசெய்யப்படுவார் என இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐந்து வீரர்கள் காயமடைந்ததால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சமபலம் இல்லாத அணியே தற்போது எம்மிடம் இருக்கிறது. ஐந்து நாட்கள் களத்தில் நின்று விளையாடுவதே தற்போது எம்முன்னே உள்ள சவால் என்று அணித்தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஜொஹன்னஸ்பேர்க் வொன்டர்ஸ் மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. இதனால் தென் ஆபிரிக்க அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வேகப்பந்துவீச்சு ஆடுகளமாக இருந்தாலும் இலங்கை அணி சுழல்பந்துவீச்சாளர்களை நம்பியே களமிறங்க வேண்டியுள்ளது. சுழல்பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கவும் பூரண உடற்தகுதியுடன் இல்லை என்பதே உண்மையான விடயமாகும். இந்த இளம் அனுபவமற்ற அணியை வைத்துக்கொண்டு தென் ஆபிரிக்காவுக்கு சவால் விடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவை பொறுத்தவரை சகலதுறைகளிலும் பலம் வாய்ந்ததாக உள்ளது. துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகல துறைகளிலும் தென் ஆபிரிக்க அணி பலம் வாய்ந்துள்ளது. இதனால் வெற்றிக்காக தென் ஆபிரிக்கா பாரியளவு சிரமப்பட வேண்டியிருக்காது.