இன்னும் 5 வருடங்களுக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரரும், இருபது20 அரங்கில் ரசிகர்களின் இதயம் கவர்ந்த வீரருமான 41 வயதுடைய கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
1999 ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் பெற்ற கிறிஸ் கெய்ல் கடந்த பல வருடங்களாக இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் அபரிமிதமாக செயற்பட்டு வருகிறார்.
சமீபத்திய ஐ.பி.எல் போட்டிகளிலும் பிரகாசித்த இவருக்கு இதுவரை மவுசு குறையவில்லை என்றாலும், வயதாகிவிட்டதால் அவர் இவ்வருடம் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத அவர் தொடர்ந்தும் இருபது20 போட்டிகளில் விளையாட எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்.
இன்னும் இரண்டு உலகக் கிண்ண இருபது20 தொடர்களில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 5 வருடங்கள் கழித்தே ஓய்வுபெறுவேன் என்றும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.