அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய குழாத்தில் தமிழக வீரரான நடராஜன் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
உமேஸ் யாதவ் உபாதை காரணமாக விலகியதால் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது உமேஸ் யாதவ் உபாதைக்குள்ளானார். அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதுடன் அதன் பின்னர் அவர் பந்துவீசுவதற்கு களமிறங்கவில்லை.
உமேஸ் யாதவ்வின் உபாதை பாரதூரமாக உள்ளதென ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சில வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
அதன்படி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலிருந்தும் உமேஸ் யாதவ் விலகியுள்ளதுடன் நாடு திரும்பவுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக நடராஜன் மற்றும் சர்துல்தாகூர் ஆகியோர் இந்திய டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள், சர்வதேச இருபது20 தொடர்களில் சிறப்பாக செயற்பட்ட நடராஜன் இந்நாட்களில் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.