பாகிஸ்தானுக்கு எதிரான பொக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 101 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டை நியூஸிலாந்து வெற்றியுடன் முடித்துக்கொண்டுள்ளது.
நியூஸிலாந்தின் மவுன்ட் மவ்கனி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்ஸன் பெற்ற 129 ஓட்டங்களின் மூலம் 431 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் சஹின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், யரீர் சாஹா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பஹீம் அஸ்ராப் 91 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
ஐகல் ஜேமிஸன் 3 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி, ட்ரென் பௌல்ட், நீல் வேங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
192 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து நான்காம் நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. டொம் பிளன்டல் 64 ஓட்டங்களையும், டொம் லதம் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 373 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி வீரர்களால் மீண்டும் பிரகாசிக்க முடியாமல் போனது.
3 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்களுடன் ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ரிஸ்வான் மற்றும் பவட் ஆலம் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது. இவர்களின் நிதானமான துடுப்பாட்டம் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிக்கும் நிலைக்கு உயர்ந்தது.
ஆனாலும், மொஹமட் ரிஸ்வான் 191 பந்துகளில் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதமடித்த பவட் ஆலம் 102 ஓட்டங்களுடன் வெளியேறினார். 269 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 பௌண்டரிகளை விளாசினார்.
அதன் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் நிற்பதற்கு நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் இடமளிக்கவில்லை.
ஐந்தாம் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வருவதற்கு 4 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் கடைசி விக்கெட்டும் வீழ்த்தப்பட பாகிஸ்தான் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 271 ஓட்டங்களுடன் முடிவுக்குவந்தது. பரப்பரப்புக்கு பஞ்சமின்றி நீடித்த இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி மயிரிழையில் வெற்றிபெற்றது.
டிம் சவுத்தி, ட்ரென் பௌல்ட், கைல் ஜேமிஸன், நீல் வேங்கர், மிச்செல் சான்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
பொக்ஸிங் டேயில் ஆரம்பமான மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தப் போட்டி மாத்திரமே ஐந்து நாட்களுக்கு நிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இலங்கை – தென்ஆபிரிக்கா, இந்தியா – அவுஸ்திரேலியா மோதிய மற்றைய இரண்டு போட்டிகளும் நான்காம் நாளில் முடிந்தன.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக கேன் வில்லியம்ஸன் தெரிவானார்.