November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பொக்ஸிங் டே” டெஸ்ட் போட்டி: ரஹானேவின் நிதானத்தால் இந்தியாவுக்கு இலகு வெற்றி

(Photo: BCCI/ Twitter)

‘பொக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அஜின்கெயா ரஹானே தலைமையிலான இந்தியா அணி வெற்றிபெற்று வரலாற்றைப் புதிப்பித்துள்ளது.

அத்துடன் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.  இதன்மூலம் அஜின்கெயா ரஹானே சதம்பெற்றால் இந்தியா வெற்றிபெறும் எனும் வெற்றி சரித்திரம் தொடர்ந்துள்ளது.

அவர் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தனது 12ஆவது சதத்தை பூர்த்தி செய்திருந்தார். இந்த 12 சதங்கள் பெறப்பட்ட போட்டிகளில் இந்தியா 9இல் வெற்றிபெற்றுள்ளதுடன் எஞ்சிய 3 போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

முதல் இன்னிங்ஸில் இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த ரஹானே இரண்டாம் இன்னிங்ஸிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

மெல்போனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 195 ஓட்டங்களையும் இந்தியா 326 ஓட்டங்களையும் பெற்றன.

131 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை நேற்றைய மூன்றாம் நாளில் பெற்றிருந்தது.

அதன்படி நான்காம் நாளான இன்று கெமருன் கிரீன் 17 ஓட்டங்களுடனும் பெட் கமின்ஸ் 15 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்று மேலும் 20 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் பெட் கமின்ஸ் ஆட்டமிழந்தார்.

கெமரூன் கிரீன் 45 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அவுஸ்திரேலியா அணியால் இன்று மேலதிகமாக 64 ஓட்டங்களையே பெறமுடிந்ததுடன் கைவசமிருந்த 4 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன. அதன்படி அவுஸ்திரேலியா அணி இரண்டாம் இன்னிங்ஸ் 200 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

பந்துவீச்சில் முஹம்மட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்த்ர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியில் இந்திய அணியின் வெற்றியிலக்கு 62 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. இலகுவான இந்த இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் பதிலெடுத்தாடிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.

சுப்மன் கில் 35 ஓட்டங்களையும், அஜின்கெயா ரஹானே 27 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர். 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 எனும் ஆட்டக்கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.