May 29, 2025 23:47:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

22 வருடங்களின் பின்பு அவுஸ்திரேலிய ஓபன் வாய்ப்பை இழக்கும் பெடரர்

முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரான சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் 22 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

அவர் முழங்கால் உபாதையிலிருந்து இன்னும் குணமடையாததே அதற்கு காரணம்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் வருடாந்தம் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடத்தப்படுகின்றன.

அவற்றில் முதல் அம்சமாக அவுஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடைபெறும். வழமையாக ஜனவரியில் ஆரம்பமாகும் இத்தொடர் இந்தமுறை கொரோனா நெருக்கடியால் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொடரில் பங்கேற்கும் வீரர்கள் இந்நாட்களில் பட்டியலிடப்படுவதுடன், சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெடரருக்கு முழங்காலில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் உபாதையிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.

39 வயதுடைய ரொஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராவார்.

அவர் ஆறு தடவைகள் அவுஸ்திரேலிய ஓபனில் சம்பியனாகியுள்ளார். கடந்த 21 வருடங்கள் தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்றுள்ள பெடரர் முதல் தடவையாக தொடரை இழக்கின்றார்.

ரொஜர் பெடரர் இவ்வருடம் ஜனவரி மாதத்துக்கு பின்னர் எந்தவொரு டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு கடந்த ஜுன் மாதத்தில் முழங்காலில் இரண்டு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனவரிக்கு முன்பு குணமடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பெடரர் காத்திருந்த போதும் அந்த எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்துள்ளது.