தென் ஆபிரிக்காவுக்கு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதற்காக இலங்கை அணி மேலும் 160 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளதுடன் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன.
செஞ்சூரியனில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 396 ஓட்டங்களைக் குவித்தது. பதிலளித்தாடிய தென் ஆபிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்களுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
பெப் டு பிலெசி 55 ஓட்டங்களுடனும், டெம்பா பவுமா 41 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். அரைச்சதமடித்த டெம்பா பவுமா 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஐந்தாம் விக்கெட்டுக்காக இணைந்த இவர்கள் 179 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சாளரான கேஸவ் மஹாராஜ் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அரைச்சதம் கடந்தார். பெப் டு பிலெசி மற்றும் கேஸவ் மஹாராஜ் ஜோடி ஏழாம் விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பெப் டு பிலெசி ஓர் ஓட்டத்தால் இரட்டை சதத்தை தவறவிட்டார். 276 பந்துகளை எதிர்கொண்ட அவர் 24 பௌண்டரிகளுடன் 199 ஓட்டங்களைக் குவித்தார்.
இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இதற்கு முன்பு அவர் 137 ஓட்டங்களைப் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.
கேஸவ் மஹாராஜ் 2 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 73 ஓட்டங்களைப் பெற்றார். தென் ஆபிரிக்க அணி 621 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 225 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், விஸ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், தசுன் சானக 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 225 ஓட்டங்கள் தேவையான கட்டாயத்தில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 6 ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸ் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.