November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஹானேவின் சத வெற்றி; சரித்திரம் தொடரும் வாய்ப்பில் இந்தியா

மெல்போர்னில் நடைபெறும் பொக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நாளில் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் அவுஸ்திரேலியா முடங்கியுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதுடன், நான்காம் நாள் ஆட்டம் அதனைத் தீர்மானிக்கும்.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததுடன், பதிலளித்தாடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களுடன் மூன்றாம் நாளில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

104 ஓட்டங்களுடன் களமிறங்கிய அணித்தலைவர் ரஹானேவினால் மேலும் 8 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. என்றாலும் 40 ஓட்டங்களுடன் களம் புகுந்த ரவீந்ர ஜடேஜா அரைச்சதமடித்து 57 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 326 ஓட்டங்களைப் பெற்று 131 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், நதன் லியோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பெட் கமின்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

131 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது.ஜோ பேர்ன்ஸ், ஸ்டீவன் ஸ்மித், அணித்தலைவர் டிம் பெய்ன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

மெத்திவ் வேட் 40 ஓட்டங்களையும், மார்னஸ் லபுசேன் 28 ஓட்டங்களையும் பெற்று அணியின் மானத்தை காத்தனர். அவுஸ்திரேலிய அணி 133 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதற்கமைய அவுஸ்திரேலிய அணி 2 ஓட்டங்களையே மேலதிகமாக பெற்றுள்ளதுடன், தோல்வியை தவிர்க்க கணிசமான ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், கைவசம் 4 விக்கெட்டுகளே எஞ்சியுள்ளன. இதனால் அஜின்கெயா ரஹானேவின் சதவெற்றி சரித்திரத்தை தொடரும் வகையில் இந்தப் போட்டி அமைந்துள்ளது.

ரஹானே சதமடித்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்ததில்லை என்பதே அந்த சரித்திரமாகும்.
அஜின்கெயா ரஹானே இதுவரை 12 சதங்களைப் பூர்த்திசெய்துள்ளதுடன், அவற்றில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளன. 12 சதம் பெற்ற போட்டி இதுவென்பதுடன் இதன் முடிவுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.