October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐசிசி கிரிக்கெட் விருதுகள்: ‘தசாப்தத்தின் கிரிக்கெட் வீரர்களாக கோஹ்லி, தோனி, ஸ்மித் மற்றும் ராஷிட் கான்’

2020 ஆம் ஆண்டு நிறைவுக்கு வருவதனையிட்டு, இந்த தசாப்தத்தில் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களுக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், இந்தத் தசாப்தத்தின் ஒரு நாள் கிரிக்கெட் வீரர் மற்றும் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் வீரர் என்ற விருதுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இந்தத் தசாப்தத்தின் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தசாப்தத்தின் இருபது 20 கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் ராஷிட் கான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தசாப்தத்தின் கிரிக்கெட் உயிர் என்ற விருது இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் எம்.எஸ். தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இந்தத் தசாப்தத்தில் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட வீரர்களைக் கொண்டு, சர்வதேச கிரிக்கெட் சபை மூவகைப் போட்டிகளுக்குமான ஐசிசி அணிகளையும் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஐசிசியின் ஒரு நாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் அணிகளில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இடம்பெற்றுள்ளார்.

மேலும், ஐசிசி டெஸ்ட் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.