January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பந்துவீச்சாளர்களை இழந்து நெருக்கடியில் இலங்கை

தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை அணியின் சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவுக்கு ஏற்பட்டுள்ள உபாதையின் பாரதூரம் காரணமாக முழுத்தொடரையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போது அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா அரைச்சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.

இதன்போது தனஞ்சய டி சில்வா மற்றும் டினேஸ் சந்திமால் ஜோடி 131 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இவர்களின் நிதானமான துடுப்பாட்டமே இலங்கை அணி 300 ஓட்டங்களை இலகுவாக கடப்பதற்கான அடித்தளமாக இருந்தது.

என்றாலும் தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது உபாதைக்குள்ளாகி களத்தைவிட்டு வெளியேறினார். துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இழந்த அவர் களத்தடுப்பிலும் ஈடுபடவில்லை.

தனஞ்சய டி சில்வா பெரும்பாலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே இடம்பெறமாட்டார் என்றே தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மாத்திரமே தென் ஆபிரிக்காவில் பந்துவீசிய அனுபவமுள்ள இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளராக இடம்பிடித்திருந்தார்.

இதேவேளை வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜிதவும் உபாதை காரணமாக பந்துவீசும் வாய்ப்பை இழந்திருந்தார். 2.1 ஓவர் பந்துவீசிய அவர் உபாதை காரணமாக களத்தைவிட்டு வெளியேறியதுடன் ஆட்டநேர முடிவுவரை களத்துக்கு திரும்பவில்லை.