இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆபிரிக்க வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து சவால் விடுத்துள்ளனர். செஞ்சூரியனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 340 ஓட்டங்களுடன் இரண்டாம் நாளான இன்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.
25 ஓட்டங்களுடன் களமிறங்கிய தசுன் சானக 66 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 396 ஓட்டங்களை எட்டியது. பின்வரிசை வீரர்களான விஸ்வ பெர்னாண்டோ, லசுரு குமார ஆகியோர் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர்.
அறிமுக வீரரான லுதோ சிபாம்ளா 4 விக்கெட்டுகளையும், வியான் மல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலளித்தாடும் தென்ஆபிரிக்க அணிக்கு டீன் எல்கர் மற்றும் எய்டன் மக்ரம் ஜோடி 141 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டது. எய்டன் மக்ரம் 68 ஓட்டங்களுடனும், டீன் எல்கர் 95 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.
வென்டர்டசன், அணித்தலைவர் குவின்டன் டி கொக் ஆகியோர் விரைவாக ஆட்டமிழக்க தென் ஆபிரிக்கா 220 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், பெப் டு பிலெஸி 55 ஓட்டங்களையும், டெம்பா பவுமா 41 ஓட்டங்களையும் பெற்று அணியை பலப்படுத்தினர்.
தென்ஆபிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பெப் டு பிலெஸியும், டெம்பா பவுமாவும் ஆட்டமிழக்காதுள்ளனர். விஸ்வ பெர்னாண்டோ, தசுன் சானக, லசுரு குமார, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.