
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் நாளான இன்று துடுப்பாட்டத்தில் இந்தியா பிரகாசித்துள்ளது. குறிப்பாக அணித்தலைவர் அஜின்கெயா ரஹானே அபார சதமடித்து ஆட்டமிழக்காதுள்ளார்.
மெல்போர்னில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலளித்தாடும் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களுடன் இன்றைய இரண்டாம் நாளை ஆரம்பித்தது.
ஆட்டத்தை ஆரம்பித்த நுப்மன் கில் 45 ஓட்டங்களுடனும், செட்டிஸ்வர் புஜாரா 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அனுமா விஹாரி, ரிஸப் பாண்ட் ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். இந்திய அணி 177 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
என்றாலும் அடுத்து இணைந்த அணித்தலைவர் அஜின்கெயா ரஹானேவும் ரவீந்ர ஜடேஜாவும் வீழ்த்தப்படாத ஆறாம் விக்கெட்டுக்காக 104 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது.
அஜின்கெயா ரஹானே அபார சதமடித்தார். 200 பந்துகளை எதிர்கொண்ட அவர், 12 பௌண்டரிகளுடன் 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். இதன்போது அவுஸ்திரேலிய வீரர்கள் ரஹானேவின் ஐந்து பிடிகளை தவறவிட்டனர்.
ரவீந்ர ஜடேஜா 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களைப் பெற்று 82 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தடுப்பின் போது இழைத்த தவறுகள் காரணமாகவே அணிக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க், ரஹானேவை ஆட்டமிழக்க கிடைத்த நான்கைந்து சந்தர்ப்பங்களை தவறவிட்டோம். அவர் நெருக்கடிக்கு மத்தியில் சதமடித்து அணியை வலுப்படுத்திவிட்டார் என கூறியுள்ளார்.