October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல் நாளில் இலங்கை ஆதிக்கம்

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. செஞ்சூரியனில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஜோடியால் முதல் விக்கெட்டுக்காக 28 ஓட்டங்களையே பகிர முடிந்தது. திமுத் கருணாரத்ன 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து குசல் மென்டிஸ் 12 ஓட்டங்களுடனும், குசல் ஜனித் பெரேரா 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கடும் சிரமத்துக்குள்ளானது.

ஆனாலும், அடுத்து இணைந்த தனஞ்சய டி சில்வாவும், டினேஸ் சந்திமாலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இவர்கள் நான்காம் விக்கெட்டுக்காக 131 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தினர்.

அரைச்சதம் கடந்த தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது உபாதை காரணமாக களத்தைவிட்டு வெளியேறினார். டினேஸ் சந்திமால் 85 ஓட்டங்களைப் பெற்றார். நிரோஸன் திக்வெல்ல 49 ஓட்டங்களையும், தசுன் ஸானக 25 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 340 ஓட்டங்களைப் பெற்று தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடுத்தனர்.

இது 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி பொக்ஸிங் டே போட்டியில் பங்கேற்றுள்ள முதல் சந்தர்ப்பமாகும்.

தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசிய போதிலும் அதனை சிறப்பாக எதிர்கொண்ட இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டி வைத்திருந்தது. இலங்கை வீரர்களின் துடுப்பாட்டம் வழமையைவிட சிறப்பாக இருந்தது.
புதுமுக வேப்பந்துவீச்சாளரான வியான் மல்டமர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.