இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜோன் எட்ரிச் தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார். சர்ரே லெஜன்ட் என வர்ணிக்கப்படும் இவர், 77 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்களுடன் 43.54 எனும் துடுப்பாட்ட சராசரியைப் பதிவுசெய்துள்ளார்.
இடப்பக்க துடுப்பாட்ட வீரரான ஜோன் எட்ரிச் 564 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 103 சதங்களுடன் 39,790 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 100 சதங்களுக்கு மேல் பெற்ற 25 வீரர்களில் ஒருவராக ஜோன் எட்ரிச் திகழ்கிறார்.
2000 ஆம் ஆண்டில் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஜோன் எட்ரிச்சுக்கு 2005 ஆம் ஆண்டில் புற்றுநோய் ஏற்பட்ட போதிலும் அதிலிருந்து மீண்ட அவர் கடந்த சில வருடங்களாக சிறந்த தேகாரோக்கியத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் சொந்த இடமான ஸ்கொட்லாந்திலுள்ள தனது இல்லத்தில் இயற்கை மரணத்தை தழுவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1963 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒல்ட் ட்ரெபட் மைதானத்தில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற ஜோன் எட்ரிச் 13 ஆண்டுகள் கழித்து அதே மைதானத்தில் அதே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெற்றமை சிறப்பம்சமாகும்.
இங்கிலாந்து சார்பில் 24 டெஸ்ட் போட்டிகளில் இரண்டாம் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சிறப்பையும் ஜோன் எட்ரிச் பெற்றுள்ளார்.
கிரிக்கெட்டின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக 1966 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.